குட்டி கதை
ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.
இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.
சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.
கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.
எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.
இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..
எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே!
யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..
அடப்பாவி!
பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?
எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,
பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.
கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...
அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.
பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான்.
நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல...
அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!
என பரிதாபமாக கேட்க...
கடைக்காரர் சிரிக்கிறார்.
மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.
பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
ராசியான ஓடு சாமி!
மகான் கொடுத்த ஓடு ஐயா...
தர்மப்பிரபு!
கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.
சுரண்டச் சுரண்ட...
அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...
மெள்ள மெள்ள...
மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!
பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!
அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,
இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க
கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?
என சொல்கிறார்.
இதே போலத்தான்...
நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்...
தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,
உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!
எனக்கு கிடைத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.மன நலம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒன்று அந்த மன நலம் தொடர்பான தகவல்களின் உங்களோடு பகிர்கிறேன்.
Friday, December 30, 2016
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
Sunday, December 25, 2016
கடவுளின் தரிசனம்
கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம்
இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..
"அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்..மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்.. அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்..சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும்ஆரம்பித்தனர்.மன்னன் "அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்க்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்" என்று உரக்க சப்தமிட்டான்..அதற்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர் மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.."விலைமதிக முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்க்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான். மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர். உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும்,தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்.. அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.. கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி "எங்கே உன் மக்கள்" என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக "அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள்" என்றான் மன்னன்.. அதற்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து... என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.
Saturday, December 24, 2016
புறம் பேசாதீர்
படிக்கவேண்டிய கதை!
காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார்.
மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.
ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.
பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.
ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.
தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.
உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.
நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!
Friday, December 23, 2016
பாரதப் போர்
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.
‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?
கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’
பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.
அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,
“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான்.
புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே
#காவி_உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.
“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.
“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு #தத்துவம்.
அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…”
அந்த காவியுடை #பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
“அது என்ன தத்துவம் ஐயா?
எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”
“#பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!
#கௌரவர்கள் யார் தெரியுமா?”
“………………..”
“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!”
“………………..”
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) #போரிடமுடியுமா?
“………………..”
“#முடியும்…! எப்போது தெரியுமா?”
வருண் மலங்க மலங்க விழித்தான்.
“#கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”
வருண் சற்று பெருமூச்சு விட்டான்.
பெரியவர் தொடர்ந்தார்.
“கிருஷ்ணர் தான் உன் #மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”
வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.
“கௌரவர்கள் #தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”
“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.
நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.
அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.
எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.”
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.
இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.
#கீதையின் பாடமும் இது தான்.”
வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.
களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட #பிரமிப்பினால்.
“அப்போது #கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.
உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.
ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”
“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”
வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.
இப்போது தரையை பார்த்தான்.
அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.
அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.
மிகப் பெரிய #உண்மை
Saturday, December 3, 2016
கர்மா
ஒரு சமயம் ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்க வில்லை.
அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.
கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சிதிரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது? கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்ய வில்லை. அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.
சரி தன் எஜமான்னான எமதர்மனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன். இதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும், காலம் வருமவரை பொறுமையாக இருக்கவும் அறிவுறித்தினான்.
ஒரு நாள்…சில அந்தணர்கள் உதவி நாடி அந்த அரசனைக் காணச் சென்றார்கள். அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.
அவளும் சரியான பாதையை அவர்களுக்கு விளக்கி விட்டு அவர்களிடம் “ ஒரு விஷயம்..சற்று எச்சரிக்கையாக இருங்கள்..இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்” என்று கூறினாள்.
இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்த்தும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்த்த் பெண்மணிக்கே என முடிவு செய்தான்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும்.பழி சொன்னதற்காக. நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே கர்மவினை அனைத்து சேரும்.
எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.
ஸ்ரீமத் பாஹவதத்திலிருந்து
தோற்க கற்றுக் கொள்வோம்
தோற்க கற்றுக்கொள்வோம் என்ன இது புதுசா இருக்கு? எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...
-
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு. 1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? 2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள...
-
ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உன...
-
பிரச்சனை என்றால் என்ன? அதற்கு ஏதாவது உருவம் உண்டா? நிச்சயமாகக் கிடையாது. மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும் தான் ஒரு நிகழ்வை...