Tuesday, August 28, 2018

யோகம்

யோகம்

யோகம் என்பது சித்தத்தில் ஏற்படும் விருத்திகளை அடக்குதல் என்கிறது யோக சாஸ்திரம். பதஞ்சலி முனிவர் எழுதிய இந்த நூல்தான் யோகம் என்பதன் ஆதார நூலாக விளங்குகிறது. இன்று யோகா என்றால் அது யோகாசனம் என்பதாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. நான் யோகா செய்கிறேன் என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் ஆசனங்களைக் குறிப்பிடுகிறார் என்றுதான் பொருள்.

ஆனால் யோகா அல்லது யோகம் என்பது வெறும் ஆசனங்கள் மட்டுமல்ல. அது மிகவும் ஆழமான பொருள் கொண்டதாக இந்தியத் தத்துவ மரபில் பயன்படுத்தப்படுகிறது. யோகம் என்பதன் வேர்ச் சொல் யுஜ், அதாவது இணைவது. மனித வாழ்வு பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கும் இணைவைத் தான் யோகம் என்று பண்டைய இந்தியத் தத்துவங்கள் கூறுகின்றன. இத்தகைய இணைவை அடையப் பல விதமாக வழிமுறைகளைத் தத்துவ ஞானிகள் முன்வைத்தார்கள். கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம், பக்தி யோகம் ஆகியவை அவற்றில் பிரதானமான வழிமுறைகள். பரம்பொருளுடன் இணைய ஞானம், பக்தி, செயல் முதலானவற்றை இந்த வழிமுறைகள் பரிந்துரைக்கின்றன. ராஜ என்னும் சொல் யோகங்களுக்கெல்லாம் தலையாயது என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. யோகம் என்பதைச் சில பயிற்சிகளின் மூலம் அடையும் வழிகளை ராஜ யோகம் முன்வைக்கிறது. இந்தப் பயிற்சிகளை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் ஒருவர் பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கலாம் என்று இது பரிந்துரைக்கிறது.

எட்டு அங்கங்களைக் கொண்ட இந்தப் பயிற்சியில் ஒரு பகுதிதான் ஆசனம் என்பது. இன்னொரு பகுதி பிராணாயாமம். இவை இரண்டும்தான் இன்று யோகா என்னும் பெயரில் அதிகம் கற்பிக்கப் பட்டுப் பயிற்சி செய்யப்படுகின்றன.

எட்டு அங்கங்கள்

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவையே ராஜ யோகத்தின் எட்டு அங்கங்கள்.

யமம் என்பது ஒரு சாதகன் (மோட்சம் அடைவதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன்) செய்ய வேண்டிய கடமைகள். அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மச்சரியம், இரக்கம், ஜபம், பொறுமை, திடம், மிதமான உணவு, பரிசுத்தம் ஆகிய பத்தும் யமம் என்பதில் அடங்கும்.

நியமம் என்பது அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள். உடல் சுத்தம், தியான நேரம், அளவான உறக்கம், அளவான சாப்பாடு, தவறு செய் வதற்கு அஞ்சுதல், ஜபம், விரதம் போன்றவை இதில் அடங்கும்.

ஆசனம் என்பது உடலைப் பண்படுத்தும் பயிற்சிகள். பிராணாயாமம் என்பது மூச்சுப் பயிற்சி. இந்தப் பயிற்சியின் மூலம் பிராண சக்தியை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செலுத்தலாம். ஆசனமும் பிராணாயாமமும் உடலின் உள் உறுப்புகள், வெளி உறுப்புகளை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் வைத்திருக்கும். மனதை அமைதிப்படுத்தி அறிவின் கூர்மையை அதிகரிக்கச் செய்யும். தியானத்துக்குத் தேவையான கவனக் குவிப்பு இந்தப் பயிற்சிகளின்போது நன்கு வசப்பட்டுவிடும்.

பிரத்யாஹாரம் என்பது வெளி முகமாக ஈர்க்கப்படும் புலன்களை உள்முகமாகத் திருப்புதல். ஒவ்வொருவரும் தமக்கென்று அமைந்துள்ள அன்றாடக் கடமைகளைப் பயனை விரும்பாமல் கடைபிடித்தலும் பிரத்யாஹாரத்தில் வரும்.

தாரணை என்பது ஏதேனும் ஒரு பொருளில் மனதை நிறுத்துவது.

தியானம் என்பது அதிலேயே ஆழ்ந்திருப்பது.

சமாதி என்பது அதிலேயே ஐக்கியமாகிவிடுவது.

நுட்பமாகப் பார்த்தால் இந்த எட்டு அங்கங்களும் ஒன்றுக்கொண்று துணை புரிவதாகவும் படிப்படியான வளர்ச்சிக்கு வழிவகுப்பனவாகவும் இருப்பதை உணரலாம்.

இவை அனைத்தும் ராஜ யோகம் எனப்படும் வழிமுறையில் உள்ளவை. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவை முறையே செயல், ஞானம், பக்தி ஆகியவற்றின் வழியே யோகம் என்னும் லட்சியத்தை அடைய வழிகாட்டுகின்றன. ராஜ யோகமோ நமது நடத்தை, பழக்க வழக்கம், உடல் திறன், மன ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் யோகத்தை அடைய வழிகாட்டுகிறது. உடலுக்கும் நடத்தைக்கும் முக்கியத்துவம் தரும் யோகம் என்றும் இதைச் சொல்லலாம். இதன் ஒரு பகுதிதான் ஆசனமும் பிராணாயாமமும்.

யோகி என்பவர் யார்?

கர்ம, ஞான, ராஜ, பக்தி ஆகிய யோகங்களைத் தாண்டி யோகம், யோகி என்னும் சொற்கள் பல இடங்களில் தனியாகவும் தத்துவ நூல்களில் பயன்படுத்தப்படுகின்றன. முதலிலேயே குறிப்பிட்டபடி ஜீவனும் பிரம்மமும் இணைதல் யோகம். இதற்கேற்பத் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள் யோகிகள். வெறுமனே யோகாசனம் செய்பவர்கள் யோகிகள் அல்ல. உடல், உணவு, மனப்போக்கு, சிந்தனை முறை, வாழ்வை அணுகும் முறை, கண்ணோட்டம் எனப் பல அம்சங்களைத் தழுவி விரிவது யோகம்.

ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று பாரதியார் சொல்கிறார். யோகம் என்பதை அதிருஷ்டம் என்னும் எளிய பொருளில் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயம் எழலாம். நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் என்கிறார் அடுத்த வரியில். பொதுநலனுக்காகச் செய்யப்படுவதுதான் யாகம் என்கிறார். பகவத் கீதையில் யக்ஞம் (யாகம்) என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தால் பாரதியார் சொல்வது அதற்கு நெருக்கமாக இருப்பதை உணரலாம். ஆகவே யோகம் என்பதை அதிருஷ்டம் என்னும் பொருளில் பாரதியார் பயன்படுத்தவில்லை. ஊருக்குழைத்திடல், அதாவது தன்னலமற்ற தொண்டு யோகம் என்கிறார். இங்கு அவர் கர்ம யோகத்தைக் குறிப்பிடுகிறார் என்று கொள்ளலாம்.

மெய்ஞானம் யாது?

போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம் என்று அடுத்த வரிகளில் சொல்கிறார். நெருக்கடிகள், சவால்கள் எனப் புறச் சூழல் எப்படி இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாத சமநிலை கொண்டவனை யோகி என பகவத் கீதை சொல்கிறது. யோகி என்பவரைப் பற்றி, “யஸ்மான்னோ த்விஜதே லோகஹ, லோகான்னோ த்விஜதே சயஹ” என்று கீதை சொல்லும் வரியின் பொருள் இதுதான்: யார் இந்த உலகத்தால் பதற்றமுறாமல் இருக்கிறாரோ, யாரால் இந்த உலகம் பதற்றமுறா மல் இருக்குமோ அவரே யோகி.

கீதையின் இன்னொரு ஸ்லோகத்தில் உணவு, பேச்சு, உறக்கம், நடமாட்டம் ஆகியவற்றில் ஒரு அளவுடன் இருப்பவர் யோகி என்று சொல்லப்படுகிறது. செய் வதைத் திறமையாகச் செய்வதே யோகம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது யோகம் என்பது எல்லைக்குட்பட்ட வாழ்வை எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் இணைப்பது என்றும், எதற்கும் பதறாத, சமநிலை தவறாத நிலையே அதற்கான வழிமுறை என்பதும் தெளிவாகிறது. கர்ம, ஞான, பக்தி, ராஜ யோகி என யாராக இருந்தாலும் இந்த அணுகுமுறை அவர்களுக்குக் கைவர வேண்டும். அசாத்தியமான சில சக்திகள் கொண்டவர்களைச் சித்த புருஷர்கள் என்றும் யோகிகள் என்றும் சொல்வார்கள். இந்த சக்திகள் யோகத்தின் பாதையில் செல்பவர் களுக்கு இயல்பாய் கிடைக்கும் சில அனுகூலங்கள். இவற்றால் கிடைக்கும் பெருமிதங்களையும் பலன்களையும் முக்கியமாகக் கருதாமல் தொடர்ந்து எல்லையற்ற சக்தியை நோக்கிய பாதையில் பய ணிப்பவரே உண்மையான யோகி.

யோகம் என்பது சித்தத்தில் எழும் விருத்திகளை அடக்குதல் என்று பதஞ்சலி முனிவர் சொல்கிறார். சித்த விருத்திகள் என்பவை சித்தத்தின் இயக்கங்கள் என்கிறார் பாரதியார். அதாவது மனம், அறிவு, சித்தம், அகங்காரம் ஆகியவை அடங்கிய உட்கருவி என்கிறார் பாரதியார். இவையனைத்தையும் சேர்த்துச் சித்தம் எனச் சொல்வது யோக சாஸ்திர வழக்கு என்று சொல்லும் பாரதியார், சித்தத்தின் இயக்கங்களை நிறுத்துதலே யோகம் என விளக்கமளிக்கிறார்.

நிச்சலனமான நதியோடு இந்த நிலையை ஒப்பிடலாம். சலனமற்ற, எதிர்பார்ப்புகளோ ஏமாற்றங்களோ அற்ற நிலை. அதிகாரத்தை எந்த வகையிலும் நாடாதிருத்தல். தவிப்புகள் அற்ற, ஊசலாட்டங்கள் அற்ற நிலை. பதற்றங்கள் அற்ற, சமநிலை கொண்ட இயல்பும் நடத்தையும். இன்பத்தையும் துன்பத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுதல். இதுவே யோகத்தின் அடிப்படை. இதுவே யோகியின் அடையாளம்

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...