Monday, October 28, 2019

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்

......................................
"குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்."
.................................

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தவுடன், என்ன வேலை இருந்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களுடன் சிறிது நேரமாவது, உரையாட வேண்டும்.

அந்தக் குழந்தைகளிடம், அரவணைப்புடன், "இன்னிக்கு ஸ்கூல்லே என்ன நடந்துச்சு.? என்று அன்பாக விசாரிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைக்கு, பள்ளியில், ஏதும் மன ரீதியான பாதிப்புகள் இருந்தால், உடனே அதைக் களைய முயற்சி செய்ய வேண்டும்.

இப்படி நீங்கள் அன்பாகப் பேசினாலே போதும். குழந்தைகள், எப்போதும் உங்கள் பக்கம் தான்.

அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது, பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதைச் சொன்னால் அம்மா அடிப்பார்கள், என்ற பயம் இல்லாமல், எதைப் பற்றியும் அம்மா, அப்பாவிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

அப்போது தான் வெளியில் அவர்களுக்கு நடக்கும் கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

அன்புமதி ஒரு 10 வயது சிறுவன். அவனது தந்தை தனது மகனுடன் நேரத்தை செலவிட முடியாத மிகவும் ஓய்வில்லாத தொழிலதிபர்.

அன்புமதி தனது தந்தையின் கவனத்திற்காக ஏங்கினான். அவன் தனது நண்பர்களைப் போலவே வெளியில் சென்று தந்தையுடன் விளையாட விரும்பினான்.

ஒரு நாள், மாலையில் தனது தந்தையை வீட்டில் பார்த்த மகன் ஆச்சரியப்பட்டான். 'அப்பா, உங்களை வீட்டில் பார்ப்பது ஒரு பெரிய ஆச்சரியம்" என்று கூறினான்.

'ஆமாம் மகனே, என் அலுவலகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே நான் வீட்டில் இருக்கிறேன். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து நான் விமான நிலையத்திற்குச் செல்வேன்" என்று அவனது தந்தை பதிலளித்தார்.

அன்பு சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பின்னர் அவன், 'அப்பா, நீங்கள் ஒரு நாளில் அல்லது அரை நாளில் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

தந்தை குழப்பம் அடைந்து மகனிடம்'நீ ஏன் இந்த கேள்வியைக் கேட்கிறாய்?" என்று கேட்டார்.

ஆனால் விடாப்பிடியாக 'ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

'ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 ஆயிரம் இருக்கும்" என்று பதில் அளித்தார்.அன்பு தனது அறைக்கு ஓடி, தனது சேமிப்புகளைக் கொண்ட உண்டியலுடன் கீழே வந்தான்.

'அப்பா, எனது உண்டியலில் 20 ஆயிரம் சேர்த்து இருக்கிறேன்.
எனக்காக இரண்டு மணி நேரத்தை ஒதுக்க முடியுமா?
நான் கடற்கரைக்குச் சென்று நாளை மாலை உங்களுடன் இரவு உணவு சாப்பிட விரும்புகிறேன். இதை உங்கள் அட்டவணையில் சேர்க்க முடியுமா?" என்று கேட்டான். தந்தை பேச்சற்று இருந்தார்!

ஆம்..,நண்பர்களே..

நீங்கள், எவ்வளவு செலவு செய்து, குழந்தைக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தாலும், நீங்கள் குழந்தகளுக்கு ஒதுக்கும் நேரம்  ஒன்று தான், அந்தப் பணத்தை விட உயர்ந்தது"

Monday, October 21, 2019

தகுதி அறியாத இடத்தில் இருக்காதே

ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார்,
*மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு   விலை மதிப்பீர்கள்  என்று கேட்டுப்பார்* என்றார், அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம்
*இது பழையது என்பதால் 5 டாலர்கள் மாத்திரமே தரமுடியும்* என்றனர்.

தந்தை, பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு,தந்தையிடம், இதற்கு 5000  டாலர் தரமுடியும் என்றனர்,

தந்தை, இதனை நூதனசாலைக்கு museum கொண்டு சென்று விலையை கேட்டுப் பார்* என்றார்,

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், *நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குற்படுத்த ஒரு வரை வரவழைத்து பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்* என்றனர்.

தந்தை, மகனைப் பார்த்து, மகனே! சரியான இடமே உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும், எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.

உனது அந்தஸ்தை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே

இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்.

Friday, August 2, 2019

பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?..

பிரச்சனை என்றால் என்ன? அதற்கு ஏதாவது உருவம் உண்டா? நிச்சயமாகக் கிடையாது.

மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும் தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்துக் கொள்வது.

ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும் போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையான பிரச்னைகள் நம் எண்ணங்களில் தான் இருக்கின்றன.

''இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்று பெரிய மனிதர்களாக இருக்கும் பலரும் மிகவும் ஏழ்மையான பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் தான்.

நமக்கு வரும் பிரச்சனைகள் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ, பணி செய்யும் மேலதிகாரியிடமோ நம் சூழ்நிலையிலோ இல்லை. அது நம் மனதில் இருக்கிறது.

ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் மதிய உணவு இடை வேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும்.( பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம் நடக்க வேண்டும்.

ஒரு முறை ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள்.

அந்த அதிகாரி பாவம்.. தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்து விடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார்.

பாதி தூரம் கடந்தவுடன் ""என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்."

"உங்கள் தலையில வச்ச பேப்பர் வெயிட்டை நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் முன்பே எடுத்து விட்டோம்.
இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே! பிரமாதம் என்றார்கள்..

ஆம்.,நண்பர்களே..,

இது நகைச்சுவை அல்ல;

இது வாழ்வியல் விளக்கம்.

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக் கொண்டும்,நாமே உருவாக்கிக் கொண்டும் இருப்பதால் தான்., நாம் பல வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்...

Tuesday, July 30, 2019

நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை..!

 நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை..!

எல்லா மொழிகளிலுமே வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பொருளும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, "என்ன, உடம்பு எப்படியிருக்கு?" என்பதையே வெவ்வேறு இடங்களில் அழுத்தம் கொடுத்துப் பேசினால் அன்பும் தெரியும்; அதிகாரமும் தெரியும்.

இது போல், எளிய ஒரு சொற்றொடர், அதன் வெவ்வேறு சொற்களில் அழுத்தம் கொடுத்துப் படிப்பதன் மூலம் நம் வாழ்க்கையையே பல கோணங்களில் புரிய வைப்பதைப் பாருங்கள்!
*நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை!*

இந்தச் சொற்றொடரில், முதலில் உங்கள் என்ற சொல்லில் அழுத்தம் கொடுங்கள். ஆமாம், இது உங்கள் வாழ்க்கைதான்! நீங்கள் யாருக்காகவும் யார் மனதை மகிழ்ச்சிப்படுத்தவும் வாழத் தேவையில்லை. அதே நேரம், கருத்து ஒத்துப் போனால் மற்றவர் சொன்னதைக் கேட்பதில் தவறில்லை. ஆனால், நமக்கு என்று ஒரு மாறுபட்ட கருத்து இருக்கும்போது ‘அப்பா சொல்கிறாரே’, ‘நண்பன் சொல்கிறானே’ என்று அதற்காக அவர்கள் பேச்சைக் கேட்பது அவசியமில்லை. நமக்கு எது சரி என்று தெரிகிறதோ, எது நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. அதோடு அதன் விளைவுகளுக்கான பொறுப்பும் இருக்கிறது.

எனக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள் என்றால், நான் பொறுப்பில்லாமல் ‘நண்பர்கள் சொல்கிறார்களே, கொஞ்ச காலம் ஜாலியாக ஊர் சுற்றி வரலாம்’ என்று கிளம்ப முடியாது. உல்லாசப் பயணம் இனிமையாகத்தான் இருக்கும். அதற்காக நம் கடமையை விட்டுக் கொடுக்க முடியாதே! இது என்னுடைய தனி முடிவு. "இல்லை, கொஞ்ச நாள்தானே! போனால் என்னவாகி விடும்?" என்று என்னை யாரும் வற்புறுத்த முடியாது. அதே மாதிரி, வேலையாயிருந்தாலும் வியாபாரமாயிருந்தாலும் என்னால் என் மனசாட்சிப்படி மட்டும்தான் நடக்க முடியும். யாருக்காகவும் அதை நான் விட்டுக்கொடுக்க முடியாது. காரணம், இது என் வாழ்க்கை! மேற்கண்ட சொற்றொடரை உங்கள் எனும் சொல்லில் அழுத்தம் கொடுத்துப் படித்துப் பார்க்கும்பொழுது இப்படியான பொருள் வருகிறது.

அடுத்து வாழ்க்கை என்ற சொல். உங்களுக்குத் தெரியும், வாழ்க்கை என்பது நாடக மேடையில்லை – இன்று முதல் நாடகம் இன்னும் தொடரும் என்று சொல்வதற்கு. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நாளும் நிதர்சனமான உண்மை. இந்த வாழ்க்கை கடவுள் நமக்குக் கொடுத்த அரிய பரிசு. இதன் எந்த ஒரு நொடியையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். நமது எண்ணங்களையும் கலை வண்ணங்களையும் உருவாக்குவதற்காகக் கிடைத்துள்ள இந்த அருமையான சந்தர்ப்பத்தை மற்றவர்களுக்கு உதவியாக, நேசம், நட்பு காட்டிச் சிறப்பாக வாழவேண்டும். ஆனால், பலர் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை. ‘வேலை, வேலை’ என்று நாள் முழுவதும் பறக்கிறார்கள். ‘இந்த வேலையை இன்றைக்குள் முடித்தாக வேண்டும்’ என்று பரபரப்பாக ஓடுகிறார்களே தவிர, நிதானமாக அனுபவிப்பதில்லை. நம்மால் முயன்றால் ஒருநாளைக்கு ஒரு மணி நேரமாவது பிறருக்கு உதவியாக இருப்பதில் செலவிட முடியாதா? அதற்கு வாழ்க்கையை ரசிக்கும் பக்குவம் வேண்டும்.

குழந்தைகளுக்குப் புத்தகம் படித்துக் காட்டக் கூட முடியாமல், மனைவியையும் குழந்தைகளையும் வெளியில் அழைத்துக் கொண்டு செல்லக் கூட நேரமில்லாமல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடிதம் எழுதுவதற்கும் முடியாமல், உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்க முடியாமல் அப்படியா உங்கள் வேலைப் பளு அழுத்துகிறது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

*நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை! – அழகான இனிமை பொங்கும் வாழ்க்கை!*

 

Monday, January 7, 2019

மனதை உழுது பார்

*ஒருமுறை புத்தர் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு ஒரு பணக்கரரின் வீட்டுக்குச் சென்றார்.*

*அந்தப் பணக்காரர் சினத்துடன்...

"அலைந்து திரிந்து பிச்சை எடுக்கும் சோம்பேரி வாழ்வை ஏன் நடத்துகிறீர்?

இது அவமானமாக இல்லையா?

உமக்கு நல்ல கட்டான உடல் உள்ளது. நீர் உழைக்கலாம். நான் உழுது விதைக்கிறேன். நான் வயலில் வேலை செய்கிறேன்.

எனது நெற்றி வியர்வையைச் சிந்தி அன்றாட உணவை சம்பாதிக்கிறேன்.

நான் உழைப்பு மிகுந்த வாழ்வை நடத்துகிறேன். நீங்களும் உழுது விதைத்தால் உமக்கு நல்லது. அப்போது நீரும் பெருமளவு உணவு பெறுவீர்!" என்று கூறினார்.*

*புத்தர், "ஐயா! நான் கூட உழுது விதைக்கிறேன்; உழுது விதைத்தபின் நான் உண்கிறேன்!" என்று கூறினார்.*

*"உம்மை ஒரு உழவர் என்று கூறுகின்றீர். ஆனால் அதற்கான அடையாளம் எதுவும் உம்மிடம் காணப்படவில்லை. உம்முடைய கலப்பை, எருதுகள், விதைகள் எங்கே?" என்று கேட்டார்.*

*அதற்கு புத்தர், "நான் சொல்வதைக் கூர்ந்து கேளுங்கள். நான் நம்பிக்கை என்னும் விதையை விதைக்கிறேன்.

நான் செய்யும் நற்செயல்களே விதைகளுக்குப் பாயும் பாசனநீர். விவேகமும் வைராக்கியமும் என் கலப்பையின் உறுப்புகள். என் மனமே வழிநடத்தும் கடிவாளம்.

தருமமே கைப்பிடி. தியானமே முள். சமமும் தமமும் - அதாவது, மன அமைதியும் இந்திரியக் கட்டுப்பாடும் எருதுகள்.

இவ்வாறு நான் மனம் என்னும் வயலை உழுது, சந்தேகம், மயக்கம், அச்சம், பிறப்பு, இறப்பு ஆகிய களைகளைக் களைந்தெரிகிறேன்.

அறுவடை செய்து கிடைக்கும் விளைச்சல், நிர்வாணம் என்னும் அமரத்துவம். இவ்வாறு உழுது அறுவடை செய்வதினால் எல்லாத் துயரங்களும் முடிவு பெறுகின்றன" என்று விடை தந்தார்.

அகந்தை மிகுந்த பணக்காரர் அறிவு பெற்றார். அவருடைய கண்கள் திறந்தன. அவர் புத்தரின் காலடியில் வீழ்ந்து பணிந்தார்.

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...