Tuesday, July 30, 2019

நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை..!

 நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை..!

எல்லா மொழிகளிலுமே வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பொருளும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, "என்ன, உடம்பு எப்படியிருக்கு?" என்பதையே வெவ்வேறு இடங்களில் அழுத்தம் கொடுத்துப் பேசினால் அன்பும் தெரியும்; அதிகாரமும் தெரியும்.

இது போல், எளிய ஒரு சொற்றொடர், அதன் வெவ்வேறு சொற்களில் அழுத்தம் கொடுத்துப் படிப்பதன் மூலம் நம் வாழ்க்கையையே பல கோணங்களில் புரிய வைப்பதைப் பாருங்கள்!
*நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை!*

இந்தச் சொற்றொடரில், முதலில் உங்கள் என்ற சொல்லில் அழுத்தம் கொடுங்கள். ஆமாம், இது உங்கள் வாழ்க்கைதான்! நீங்கள் யாருக்காகவும் யார் மனதை மகிழ்ச்சிப்படுத்தவும் வாழத் தேவையில்லை. அதே நேரம், கருத்து ஒத்துப் போனால் மற்றவர் சொன்னதைக் கேட்பதில் தவறில்லை. ஆனால், நமக்கு என்று ஒரு மாறுபட்ட கருத்து இருக்கும்போது ‘அப்பா சொல்கிறாரே’, ‘நண்பன் சொல்கிறானே’ என்று அதற்காக அவர்கள் பேச்சைக் கேட்பது அவசியமில்லை. நமக்கு எது சரி என்று தெரிகிறதோ, எது நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்யும் உரிமை நமக்கு இருக்கிறது. அதோடு அதன் விளைவுகளுக்கான பொறுப்பும் இருக்கிறது.

எனக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள் என்றால், நான் பொறுப்பில்லாமல் ‘நண்பர்கள் சொல்கிறார்களே, கொஞ்ச காலம் ஜாலியாக ஊர் சுற்றி வரலாம்’ என்று கிளம்ப முடியாது. உல்லாசப் பயணம் இனிமையாகத்தான் இருக்கும். அதற்காக நம் கடமையை விட்டுக் கொடுக்க முடியாதே! இது என்னுடைய தனி முடிவு. "இல்லை, கொஞ்ச நாள்தானே! போனால் என்னவாகி விடும்?" என்று என்னை யாரும் வற்புறுத்த முடியாது. அதே மாதிரி, வேலையாயிருந்தாலும் வியாபாரமாயிருந்தாலும் என்னால் என் மனசாட்சிப்படி மட்டும்தான் நடக்க முடியும். யாருக்காகவும் அதை நான் விட்டுக்கொடுக்க முடியாது. காரணம், இது என் வாழ்க்கை! மேற்கண்ட சொற்றொடரை உங்கள் எனும் சொல்லில் அழுத்தம் கொடுத்துப் படித்துப் பார்க்கும்பொழுது இப்படியான பொருள் வருகிறது.

அடுத்து வாழ்க்கை என்ற சொல். உங்களுக்குத் தெரியும், வாழ்க்கை என்பது நாடக மேடையில்லை – இன்று முதல் நாடகம் இன்னும் தொடரும் என்று சொல்வதற்கு. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நாளும் நிதர்சனமான உண்மை. இந்த வாழ்க்கை கடவுள் நமக்குக் கொடுத்த அரிய பரிசு. இதன் எந்த ஒரு நொடியையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். நமது எண்ணங்களையும் கலை வண்ணங்களையும் உருவாக்குவதற்காகக் கிடைத்துள்ள இந்த அருமையான சந்தர்ப்பத்தை மற்றவர்களுக்கு உதவியாக, நேசம், நட்பு காட்டிச் சிறப்பாக வாழவேண்டும். ஆனால், பலர் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை. ‘வேலை, வேலை’ என்று நாள் முழுவதும் பறக்கிறார்கள். ‘இந்த வேலையை இன்றைக்குள் முடித்தாக வேண்டும்’ என்று பரபரப்பாக ஓடுகிறார்களே தவிர, நிதானமாக அனுபவிப்பதில்லை. நம்மால் முயன்றால் ஒருநாளைக்கு ஒரு மணி நேரமாவது பிறருக்கு உதவியாக இருப்பதில் செலவிட முடியாதா? அதற்கு வாழ்க்கையை ரசிக்கும் பக்குவம் வேண்டும்.

குழந்தைகளுக்குப் புத்தகம் படித்துக் காட்டக் கூட முடியாமல், மனைவியையும் குழந்தைகளையும் வெளியில் அழைத்துக் கொண்டு செல்லக் கூட நேரமில்லாமல், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடிதம் எழுதுவதற்கும் முடியாமல், உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்க முடியாமல் அப்படியா உங்கள் வேலைப் பளு அழுத்துகிறது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

*நீங்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை! – அழகான இனிமை பொங்கும் வாழ்க்கை!*

 

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...