Monday, May 28, 2018

வாழ்க்கையை கொண்டாடுங்கள்

வாழ்க்கையை கொண்டாடுங்கள் (Happiness in Life)

தினம் ரூபாய் 86400/-.
 
ஒரு சின்ன கற்பனை. விருப்பமுடன் படியுங்கள்

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு. அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் " உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே? உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக் கணக்கின் பெயர் -காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை. அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400 வினாடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடிக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400 வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?
 
வாழ்க்கை என்பது ஒருமுறை தான் அதை மகிழ்ச்சியுடனும் , உறவுகளுடனும் , மனிதனேயத்துடனும் இறைவனுக்கு   ஏற்ற வாழ்க்கையாக வாழ்வோம் 
  
வாழ்க்கையை வாழவே பணம் தேவை , பணத்தை சேர்க்க வாழ்வு அல்ல !
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.  சந்தோஷமாகஇருங்கள் 

மீண்டும் பிறப்போம் என்பது நிச்சயம் இல்லை , மீண்டும் அம்மா,அப்பா, சகோதரர்கள் ,சகோதரிகள் ,நண்பர்கள் ,உறவுகள் வருவது இல்லை !
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.


Saturday, May 19, 2018

அப்பாவின் கடிதம் மகனுக்கு

தந்தை தன் மகனுக்கு எழுதிய அறிவு சொத்து பத்திரம்.....பத்திரமாக ஆழ்மனதில் பதித்துக்கள் கொள் மகனே

அன்புள்ள மகனுக்கு, மகளுக்கும் பொருந்தும்

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.

கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.

உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.

வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.

4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும். நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இலவசமாக உணவு கிடைக்காது.

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.

அன்புடன் ,
உன் அப்பா.

இக் கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர், குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.

இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.

அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம். யான் மகனா இருந்த போதும் எங்க அப்பா காலத்தில் அவருக்கும் இந்த அறிவு சொத்து கிடைக்கவில்லை .  

காலம் கனிந்தால் வாழ்க்கை இனிக்கும்

flower

ஒரு நாள் அன்பு என்பவர் ரொம்பவும் சோர்ந்து போய் காணப்பட்டார். அவருக்கு வாழ்க்கையே பிடிக்காமல் போய்விட்டது. அவர் வாழ்க்கையை வாழ்வதற்கே வெறுத்து விட்டார். அதனால், விரக்தியோடு சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு காடு தென்பட்டது.
அந்த காட்டிற்கு சென்றபோது, அந்த காட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தார். அந்த பெரியவரிடம் அன்பு தன் முடிவைத் தெரிவித்தார். தான் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தை சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அன்பு கூறினார்.
அதைக்கேட்ட அந்த பெரியவர் புன்முறுவல் பூத்தார். காட்டிற்குள் அற்புதமாக அமைந்திருக்கும் அவரது குடிலுக்கு அழைத்துச் சென்றார். அவரது குடிசை மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது. சுற்றியும் பூச்செடிகளாக இருந்தன. குடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றை எல்லாம் காட்டி அன்பிடம் கேட்டார்.
இவை என்னவென்று தெரிகிறதா?
ஏன் தெரியாது.. பூச்செடிகளும், மூங்கில்களும் என்றார் அன்பு. இவற்றை நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன் என்றார் பெரியவர். ஓ..! அழகாக வளர்ந்துள்ளதே என அன்பு ஆச்சரியப்பட்டார். இந்த பூச்செடிகளையும், இந்த மூங்கில் தோப்பில் உள்ள மூங்கிலையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன் என்றார் அந்த பெரியவர். அவர் சொல்வதை அன்பு வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பூந்தோட்டத்தையும், இந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்!
இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம் பரப்பின. மூங்கில் விதைகள் மட்டும் ஒரு வாரமாகியும் முளைவிடவில்லை. ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை. இரண்டு வாரங்களாகின. மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை. மூன்று வாரங்களாயின. மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை.
ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை. கடைசியில் எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் வெளிவந்திருந்தன.
அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோடு ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான் ஆனால், வெறும் ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இப்போது தோப்பாய் நிற்கின்றன. அந்த விதைகள் கிட்டத்தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன.
இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தை சுமத்திவிடுவதில்லை என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் காட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.
உன்னுடைய இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர் பாய்ச்சலுக்கான அவகாசமிது.
அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே! ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா? அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்.
உனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய். இந்த மூங்கில் உயரத்திற்கு நீ வளர்வதற்கு, உனது முயற்சிகளை அதிகரித்து மூங்கிலைப் போல வீரியமாய் வளர்ந்து விண்ணைத் தொடு!

Saturday, May 5, 2018

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும்.
எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும்.
அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான்.
எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்து விடும்.
அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும்.
அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்..
ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக் கொண்டே வருவதைப்போன்றது.
நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு.
எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப் போக்க  உதவும் 10 விடயங்கள்.
1. #தியானம்
➖➖➖➖➖
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம்.
ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. #புன்னகை
➖➖➖➖➖
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் முகத்தை பாருங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை
வரவழையுங்கள்.  முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள்.
சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. #நண்பர்கள்
➖➖➖➖➖
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. #எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்
➖➖➖➖➖➖➖➖➖➖
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. #குறை_கூறாதீர்கள்
       ➖➖➖➖➖
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள்.
அது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. #உதவுங்கள்
➖➖➖➖➖
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசை திருப்ப இதை விட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை.
அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி
(அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. #எது_நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
➖➖➖➖➖➖➖➖➖➖
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது.
நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர் கொள்ளும் போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. #பாடுங்கள்
➖➖➖➖➖
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. #நன்றி_கூறுங்கள்
      ➖➖➖➖➖
நன்றி கூறுவதை விட சிறந்த நேர்மறை உணர்வு இருக்க முடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள்.
அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. #நல்லதை_படியுங்கள்
        ➖➖➖➖➖
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்?
முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள்.
அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதே போன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்து வரும்.
ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..?
முடிந்த வரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்,
அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள்,
அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள்,
அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள்,
அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள்,
அது தலைவிதியை மாற்றக்கூடும்.
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...