Wednesday, March 29, 2017

மன அமைதி பெற

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

நாட்டை பரிபாலனம் செய்வதில் அந்த மன்னன் சிறந்து விளங்கினான். மக்கள் மெச்சும் ஆட்சியை தந்துகொண்டிருந்தான். இருந்தாலும் அவன் மனதில் சற்றும் நிம்மதி இல்லை. எவ்வளவோ ஆராய்ச்சி செய்தும், தன்னை சுயபரிசோதனை செய்தும் அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை.

தனது ஆளுகைக்கு உட்பட்ட காட்டில் ஒரு மிகப் பெரிய துறவி வந்து குடில் அமைத்து தங்கியிருப்பதை ஒற்றர்கள் மூலம் தெரிந்துகொள்கிறான். அவரை பற்றியும் அவரது அருங்குணங்கள் பற்றியும் அவன் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறான். எதன் மீதும் பற்றற்ற உண்மையான துறவி அவர். அவரை சந்தித்து தனது மனக்குழப்பங்களுக்கான விடையை தெரிந்துகொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை சந்திக்க காட்டுக்கு புறப்பட்டான்.

மன்னனை அன்புடன் வரவேற்ற துறவி, “அரச காரியங்கள் செவ்வனே நடக்கின்றனவா?  மக்கள் துயரின்றி இருக்கிறார்களா ?” என்று கேட்டார்.

“ஆமாம் சுவாமி. என்னால் இயன்ற அளவு நல்லாட்சி வழங்கி வருகிறேன்!”

”அப்படியானல் உனக்கு என்ன குறை?”

“என் மனதில் சிறிதும் அமைதி இல்லை! அதற்கான காரணமும் புரியவில்லை!” என்றான் மன்னன் ஏக்கத்துடன்.

சிறிது யோசித்த பிறகு குரூ , ”அப்படியானால் ஒன்று  செய், உன் நாட்டை எனக்குக் கொடுத்து விடு”  என்றார்.

அவரை பற்றி நன்கு அறிந்தவன் ஆதலால் ஆச்சிரியப்பட்ட மன்னன், “நான் செய்த பாக்கியம். எடுத்துக்கொள்ளுங்கள் சுவாமி இப்போதே!!” என்றான்.

சொன்னதோடு தன்னுடன் வந்திருந்த மந்திரியிடம் துறவியிடம் தான் நாட்டை கொடுத்துவிட்டதாக பட்டயம் எழுதி தந்தான். கையோடு தனது மணிமுடியையும் கழற்றி வைத்தான்.

“சரி, நாட்டை எனக்கு கொடுத்து விட்டாய், நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார் குரு.

மன்னன் சற்றும் தயக்கமின்றி , ”என் வழி செலவுக்குச் சிறிது பொருள் எடுத்துக்கொண்டு எங்காவது செல்வேன்” என்றான்.

“நாட்டையே எனக்கு தந்த பிறகு கஜானா மற்றும் அரண்மனையில் உள்ள பொருட்கள் அனைத்தும் என்னுடையது தானே? அதில் பொருள் எடுக்க உனக்கு எது உரிமை?” என்று மன்னனை மடக்கினார் குரு.

திகைத்த மன்னன், “தாங்கள் சொல்வது சரி தான்,  நான் இப்படியே போகிறேன்!” என்றான்.

“எங்கு போவாய்?”

“எங்காவது போய் எனக்கு தெரிந்த வேலை ஏதாவது செய்து பிழைத்துக்கொள்வேன்”

“ஏன்.. அந்த வேலையை இங்கேயே நீ செய்யலாமே?” என்ற குரு, “என்  பிரதிநிதியாக இந்த நாட்டை நீயே ஆண்டு வா, உன் செலவுக்கு அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து நியாயம் என்று உன் மனதுக்கு படும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியம் பெற்றுக்கொள். எனக்கு எப்போது வசதிப்படுமோ அப்போது நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்”‘ என்றார்

”சரி!” என்ற படி நாடு திரும்பினான் மன்னன். துறவியிடம் சொன்னபடி மன்னன் ஆட்சி புரிந்துவந்தான். ஆண்டுகள் சில உருண்டோடின.

திடீரென ஒரு நாள் துறவி அரண்மனைக்கு வந்தார். மன்னன் குருவை பணிந்து வரவேற்றான்.

“என்ன மன்னா, எப்படி இருக்கிறது நாடு?”

“ஆகா! நான் என்ன சொல்வது குருவே… மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். கணக்கு வழக்குகள்  எல்லாம் சரியாக இருக்கின்றன,  நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்!” எழுந்திருந்தான் மன்னன்.

கணக்குகளை கொண்டு வர எழுந்த மன்னனைக் கையமர்த்தி தடுத்தார் குரு.

“கணக்குகள் கிடக்கட்டும். உன் மன நிலை  எப்படி இருக்கிறது?

“நிம்மதியாய் இருக்கிறது” என்றான் மன்னன்.

“ஏன்?”

மன்னனுக்குப் புரியவில்லை.

“இதற்கு முன் நீ செய்த ஆட்சி முறைக்கும் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா?”  குரு நிதானமாய் கேட்டார்.

“இல்லை என்றான்”” மன்னன் திகைப்புடன்.

“முதலில் என்னை நாடி வந்தபோதும் இதை தான் செய்து கொண்டிருந்தாய்… இப்போதும் அதைத் தான் செய்கிறாய்… அதே அரண்மனை, அதே அதிகாரிகள், அதே சிம்மாசனம், அப்போது இல்லாத நிம்மதி இப்போது மட்டும் உனக்கு எப்படி வந்தது?””

மன்னன் விழித்தான்.  குரு விளக்கினார்.

“அப்போது இந்த அரசும் ஆட்சியையும் உனது என நீ இருந்தாய்.  இப்போது இது வேறொருவருடையது; நாம் வெறும் பிரதிநிதி என்ற உணர்வுடன் இருக்கிறாய்.  “இது எனது” என்று நீ எண்ணிய வரையில் உன் மனம் நிம்மதியற்றுத் திண்டாடியது.  “இது எனது இல்லை” என்ற உணர்வு ஏற்பட்டதுமே மனதின் துயரங்கள் விலகி விட்டன.

”உண்மையில் இந்த உலகம் நமதல்ல.  படைத்தவன் யாரோ !  இந்த உடல் நமதல்ல.  அளித்தவன் யாரோ!  ஆகவே “இது எனதல்ல “” என்ற நினைப்புடன்  ஆட்சி புரிந்து வா,  அந்தப் பற்றற்ற மனநிலை உனக்கு வந்து விட்டால் அரண்மனையோ, கானகமோ, காவலரோ, கள்வரோ, எங்கு எவர் நடுவில் இருந்தாலும் உன் மனதை துயரங்கள் அணுகாது” என்று கூறி விடை பெற்றார் குரு

Friday, March 17, 2017

ஆசையே துன்பத்திற்கு காரணம்

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

Thursday, March 9, 2017

மோட்சம்

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது பார்வதி கேட்டார்

*ஐயனே கங்கையில் குளித்தால்* *அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள்*

ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார் 

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் “ என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்க” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லை யா? “ என வினவினார். அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவர் சொன்னார் " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை “

என சொல்லி அழைத்து சென்றார்

*நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும்*....

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...