Monday, July 31, 2017

பற்றற்று இரு

ஒருவன் தன வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும்.ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு,ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான்.வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான்.

படகு ஆற்றில் சிறிது தூரம் சென்றவுடன், ஆடத்தொடங்கியது. படகில், அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக, படகு,மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது.ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது. நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொண்ட அவன்,விரைந்து செயலாற்றத் தொடங்கினான். பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான்.இவ்வாறு கட்டில்,பீரோ,கிரைண்டர்,மிக்சி,குளிர்சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளி விட்டான்.ஓரளவு பாரம் குறைந்தவுடன், படகு, மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது. படகில் நீர் நுழைவதும் நின்றுவிட்டது.படகு பாதுகாப்பாக மறுகரையை வந்து அடைந்தது.

கவலையுடன் இருந்த மனைவியைப் பார்த்துக் கணவன் சொன்னான், "கவலைப்படாதே,இந்தப் பொருட்கள் எல்லாம், நம்மைவிட்டுப் போகாதிருந்தால்,நம்முடைய உயிர்,நம்மைவிட்டுப் போயிருக்கும்.நம்முடைய அருமைக் குழந்தைகளையும்,நாம் இழந்திருப்போம்.நம்மைவிட்டுப் போன இப்பொருட்களை எல்லாம், நாம் திரும்பப் பெறமுடியும். ஆகையால் நீ கவலைப்படாதே"-என்று ஆறுதல் கூறினான்.அவன் மனைவி,கண்களில் ஆனந்தக் கண்ணீர்மல்க,அப்படியே தன கணவன் மீது சாய்ந்து கொண்டாள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்பது குறள்.ஒருவன்,எந்தெந்தப் பொருட்களிடம் பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ,அந்தந்தப் பொருட்களினால்,அவனுக்குத் துன்பம் இல்லை என்பது இக்குறளின் பொருள்.

Sunday, July 30, 2017

இறை நம்பிக்கை

#முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.

#பார்த்தேன்” என்றார் பரமன்.

#பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.

#அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”

#ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

#வணக்கம், முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

#முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

#சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

#மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

#அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.

#முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

#அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

#முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.

#இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.

#ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

#அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?”என்று கேட்டார் முனிவர்.

#முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

#இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.-----வள்ளுவர்.

#தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.

Saturday, July 29, 2017

தெளிவாய் மனமே

ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.

அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது

அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி

அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு"...???

ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே

தினமும் அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க" என்று கேட்டாள்

அதற்கு அந்த மனிதர்.

" எனக்கு ஒன்றுமே புரியவில்லை
ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்.

கோபமடைந்த மனைவி, முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்.

அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.

மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா உபன்யாசத்துக்குப் போனேன்னு சொல்றீங்க"

"என்ன சொன்னாங்கன்னு கேட்டால்
ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க".

"நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்
எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்.

அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது.

"நீ சொல்லறது சரிதான் சல்லடையில் தண்ணீர் வேணுமானல்  நிரப்ப முடியாம போகலாம்"

"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு"

"அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்".

புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்

கடவுள் சோதிப்பதில்லை

கடும் புயலில் சிக்கிய கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.
அதில் ஒருவன் நாராயணா என்னை காப்பாற்று என்று கதறி வேண்டுகிறான்.  அருகிலுள்ள தீவு ஒன்றில் கடலலை அவனை கரை ஒதுக்கியது .

அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லாத இடத்தை கண்டு பயந்தவாறு
“நாராயணா"  இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.
ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று வேண்டுகிறான்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கிடைக்கும் என்று தினமும்  எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான்.
எதுவும் உதவி கிடைத்தபாடில்லை.
இப்படியே நாட்கள் ஓடுகின்றன.
தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்களை வைத்து  ஒரு சிறிய குடிசை கட்டுகிறான்.

இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன.
இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை.

கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மை காப்பாற்றுவார் நம்பிக்கையுடன்  ஒரு நாள் இவன்

உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை

திடுக்கிட வைத்தது.

இவன் தங்கி  இருந்த ஒரே குடிசையும்  தீப்பிடித்து வானுயுற எழும்பிய புகையுடன் எரிந்துகொண்டிருந்தது.
குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன.
அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது.

“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன்.
நீ என்னடாவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் இருந்த  தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது.

“அப்பாடா… நல்ல வேளை… ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.
கப்பலில் இருந்தவர்கள் அவனை காப்பாற்றினார்கள்.

நான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்.

யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி உதவி கேட்கிறார்கள்  என்று நினைத்தோம்” என்றனர் .
அப்போது ஸ்ரீ மன் நாராயணன்  குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வேதனைப்பட்டான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக நினைத்து விடுகிறோம்.

நம்மை காக்கவே (மீட்கவே) அவர் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறார்.
அவருடைய செயல்கள்  அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால் எல்லாம் நலமே.

"ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளே  சரணம்"

Thursday, July 20, 2017

கலியுகத்தில் மனிதர்கள்

கலியுகத்தில் என்னென்ன நடைபெறும் என்பதை விளக்கமாக கூறிய ஸ்ரீ கிருஷ்ணர*்

பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வியை கேட்டனர்...

அதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்..." என்று கூறி... தனது வில்லில் இருந்து நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்... அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.

சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது...

இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான்.

அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்...

அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்.

பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை இதனால் கன்றுக்கு சிறிய காயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதனை தடுக்க சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.

'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான்.

அப்போது...

மலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது.

அவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.

ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

இவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.

அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர்.

கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்...

"பீமா...! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள்... ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும்,  தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்...

ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்...

நிரம்பி வழியும் நான்கு  கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்..." என்றார்.

பின்னர் அர்ஜூனனிடம் திரும்பி, கிருஷ்ணர்,

"அர்ஜூனா! கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள்,  போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்...

இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்...

இனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல...!" என்றார்.

தொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், "சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்..

இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்...

இதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.

இவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்...

கன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்..."

அடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர்,

"நகுலா...! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும்,

நன்னெறிகளிலிருந்தும் நீங்குவார்கள்...

யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்...

எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்...

இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்...

மரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை...

தடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல...!" என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்.

இன்றைய கலியுகத்தில் தற்போது கிருஷ்ணர் கூறியபடித்தான் நடந்துகொண்டிருக்கிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயத்தில் இதற்கு தீர்வாகவும் இறைவனை சரணடைவதை தவிர வேறு எந்த தீர்வும் நமக்குக் கைகொடுக்காது என்தையும் கிருஷ்ணர் தெளிவாக கூறியுள்ளார்.. எனவே இந்த கலியுகத்தில் நாமும் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்து இறையருள் பெறுவோம்.

Tuesday, July 18, 2017

கர்மவினை கதைகள்

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.
1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?
2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?
4. கர்மவினைகளைஅனுபவித்துதான் தீர்க்கவேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.
பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையைபார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழைவிவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாகஇருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனதுவாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களைதியானத்திலும் பிராத்தனையிலும்செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்துகொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சிகுணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும் குணமுடையவனாகஅவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில்சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கைஎன்பது துளிகூட இல்லை. அவனுக்குசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி
செய்வது என்பது வாடிக்கையான வேலை.இதன் காரணமாக ஒரு கட்டத்தில்இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லைஎன்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமானபிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்குஅதிகமான பறவைகளையும்விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்துகொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுக்கஉட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவது போல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததைபார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். 

இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடுமுட்டி கடுமையான காயங்களுடன்படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.
இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வதுஅசிங்கம் என்று சித்தனின் மனைவிஅவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையைநினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொருநொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட
அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லைஎன்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்துகொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்துதன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோதூக்குவது போல் உணர்ந்தான்.

ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன்வணங்கினானோ அதே தெய்வம் அவனைகாப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோனவில்லை, மாறாக சண்டை போடதொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான். அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனைதன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான்சித்தன்.

இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார்,சித்தா நீ இப்பிறவியில்
நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய். 

நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகலநன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீஅனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். 

ஆன்மீகத்தை தொடங்கும்ஒருவன் முதலில் அவனது பாவ பதிவையே  
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாகஅக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின்அவன் பாவ பதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்துபாவங்களும் கரைந்துவிட்டன.

 இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்துதெரிந்து கொள் என்று சிலஅறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலைநலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரதுசொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்குகிடைத்தது. 

நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில்
வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான். ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. 

அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம். 

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம். இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்
பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான எதிர்வினை செயல்படும். எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன் தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த
கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே
கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.

ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.
அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வரவேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும். ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு. 

எப்படியென்றால் நீங்கள் அதே தெரு வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள். 

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில் உள்ள சேற்றை துடைப்பதற்காக தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில் அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
.
நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற து. இதைதான் " தலைக்கு வந்தது 
தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும்
உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. 

உங்கள் செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும்
நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. 

இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்" என்பதை விட்டுவிட வேண்டும். ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.

அந்த விதிவிலக்கு என்பது கூட இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும் சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு மட்டும்? 

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான வினைகள்தான் தற்போது நீங்கள் அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நீங்கள் அடையும்போது, உங்களின் 95%
கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர் என்று  அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோன்றலாம். ஆனால்
அவரை பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார். இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! 

அந்த ஞானியை பொறுத்தவரை அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை
என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது. காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான் இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும்
உதிப்பதும் கிடையாது!! மறைவதும் கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன ்அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும் என்ற விதி இருக்கும், ஆனால் இவன் உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய கணக்குகளை அழித்துவிடுவார்.

முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.
அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும் கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!

நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு
அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே சிறந்தது ஆகும்.
இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும். "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.

அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க வேண்டும். இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது மாறிக்கொண்டே இருக்கும். அந்த தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொறுத்தவரை, அவர்களுடைய வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்
"ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர ஒவ்வொரு முறையும் இருக்காது. ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில் அத்தனையும் அடங்கியும் விடும்.

இதையும் புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு
தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம் மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு. கடவுளிடமும் இதை குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால் இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.

மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால்
மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும் வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை
வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல்என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால் ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. 
மேலும் எதிர்வரும் கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது. எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன் பெறுவர்.   

எப்படியென்றால் உங்கள் அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.உங்கள்  தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ, உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்
ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!

எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற உங்களை சார்ந்த மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால் இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!! நன்றி...


Friday, July 7, 2017

மஹா பெரியவாவின் 100 முத்தான பொன்மொழிகள்

மஹா பெரியவாவின் 100 முத்தான பொன்மொழிகள்:

1. நம் தாயாகிய பூமி, நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்…

2. நம் தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே, அவரை வணங்குங்கள்…

3. பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.

4. எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.

5. எடுத்துச் சொல்வதைவிட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.

6. வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

8. அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.

9. தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

10. நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.

12. பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.

13. இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராய்ச்சி செய்யுங்கள்.

14. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.

15. அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

16. அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.

17. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.

18. பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

19. அன்பினால் பிறரை திருத்துவதுதான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.

20. நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே.

21. தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

22. ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

23. கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.

24. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

25. அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது… யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.

26. உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள்... செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

27. பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.

28. பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

29. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

30. நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.

31. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

32. தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.

33. உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.

34. கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.

35. எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.

36. பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.

37. நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.

38. எல்லார் இதயங்களையும் நட்பால் வெல்லுங்கள். பிறரையும் தன்னைப் போல் நோக்குங்கள்.

39. பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.

40. சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.

41. புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும் ஆணவம் கூடாது.

42. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.

43. பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

44. வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.

45. வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

46. பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.

47. சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.

48. எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.

49. சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.

50. ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.
                                                                      
51. நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.

52. தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.

53. கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.

54.எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.

55.ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.

56. ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.

                                                                                    
57. பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.

58. போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால்தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.

59. வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.

60. வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.

61. உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.

62. பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.

63. எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.

64. யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது. அனைவரிடமும் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.

65. மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.

66. குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.

67. மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

68. கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.

69. கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.
                                                                           
70. கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

71. கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

72. கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.

73. பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.

74. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.

75. சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.

76. பூமியை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

77. அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.

78. வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.

79. உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.

80. துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.

81. பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.

82. மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

83. எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.

84. நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.

85. எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.

86. ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.

87. கடவுளைப் பூஜிப்பதால் மனம் சுத்தம் அடைவதோடு, புண்ணியமும் உண்டாகிறது.

88. பூஜை மட்டுமில்லாமல், சாப்பிடும் போது மனதிற்குள், 'கருணையால் எனக்கு அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என்று சிந்திப்பது இன்னும் நல்லது.

89. உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

90. பக்தியோடு உண்பதால் மனதில் நல்லெண்ணம் உண்டாகும். இந்த பழக்கம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

91. உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே ஏற்படும்.

92. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை 'கர்ம கோட்பாடு' என கூறுகிறது.

93. அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.

94. 'மவுனம் கலக நாஸ்தி' என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.

95. பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.

96. அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.

97. மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.

98. இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.

99. எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம்.

100. நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...